சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.ப்ரியங்கா அருள்மோகன் க்தாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது நடிகர் விஜய்யும், சூர்யாவும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் இயக்குநர்கள் நெல்சன் திலீப் குமாரும், பாண்டிராஜும் உடனிருந்துள்ளனர்.

விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து ஆரம்ப காலங்களில் நேருக்கு நேர், பிரெண்ட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இருவரும் சினிமாவை தாண்டி நண்பர்களாகவும் உள்ளனர். அதன் பின் விஜய் சூர்யா இருவருமே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஆகிவிட்டதால் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசி கொண்டதாக வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சந்தித்து கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் எதுவும் இணையத்தில் கசியுமா என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.