நாடு வங்குராேத்து நிலைக்கு கொண்டுசெல்லும் வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்த நிலைக்கு அரசாங்கமே காரணமாகும். மாறாக நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் இதற்கு பொப்புக்கூறவேண்டியதில்லை. அத்துடன் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 வருடங்களுக்கு மாற்றமுடியாத கொள்கை திட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி அமைத்து வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு கடந்த அரசாங்கமே பிரதான காரணம்  என அரசாங்கம் தெரிவித்துவரும் குற்றச்சாட்டு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருகின்றது. இதிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. என்றாலும் வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் பழைமையான, அனுபவமுள்ள கட்சி என்றவகையில் 15 வருடங்களுக்கு மாற்ற முடியாத கொள்கை திட்டம் ஒன்றை அமைத்து வருகின்றோம். தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே இது அமைக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூறவேண்டும் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. இந்த நிலைமைக்கு நாங்கள் பொறுப்பு கூறவேண்டியதில்லை. 

2015இல் இருந்து 2019 வரை எமது அரசாங்கத்தில் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து, எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாத்துவந்தோம். அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் அமைத்திருந்தோம். அதனால்தான் எங்களுக்கு  அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொணடு, எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலைக்கு கொடுக்க முடியுமாகியது. 

ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் எமது திட்டங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்து, அரசாங்கத்துடன் இருக்கும் வியாபாரிகளுக்கு தேவையான மாதிரி பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய ஆரம்பித்தது. அதன் பெறுபேறே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும். அதனால் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்.

மேலும் பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எமது நாட்டை கடன் மீள வழங்க முடியாத நாடு என்ற நிலைக்கு தரமிறக்கி இருக்கின்றது. அதற்கான காரணத்தையும் அந்த நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. இன்னும் இரண்டு கட்டங்கள் தரம் இறங்கினால் எமது நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும். அந்த நிலைக்கே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. 

இலங்கை தரமிறங்க காரணமாக தெரிவிக்கப்பட்ட விடயங்களில், இலங்கை மத்திய வங்கி அண்மையில் 400 டொலர் மில்லியன் ரூபா பணம் அச்சிட்டமை, நாட்டின் ஜனநாயக ஸ்திரதன்மை 47வீதமாக குறைந்திருந்தமை மற்றும் 2022 ஆம் ஆண்டு நாடு 6.9 டொலர் பில்லியன் கடன் வழங்குவதற்கு, நாட்டுக்கு கிடைக்கும் தொகை போதுமானதாக இல்லை என நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே சரியானமுறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய தவறியதாலே பாரிய பொருளாதார பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. 

நாட்டை கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சியினால் முடியும்.  அதனால் 15வருடங்களுக்கு மாற்றமுடியாத கொள்கை திட்டம் ஒன்றை அமைத்து வருகின்றோம் என்றார்.