சீசெல்ஸ்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சீசெல்ஸின் லடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இலங்கையரான டொன் ஹரீந்திர பொன்னவிலவின் (47) சடலம், அவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பணிக்கு நீண்ட நாட்கள் சமூகமளிக்காத காரணத்தினால், அவரது வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், குறித்த நபர் வீட்டில் விழுந்து கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின்போது எவ்வித துப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போது பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்களை வைத்து இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.