28.10.1987 அன்று இந்தியப் பிரதமமந்திரி ராஜீவ் காந்தி அவர்களுக்கு அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றம் சம்பந்தன் ஆகியோர் அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அடிப்படையான அபிலாசைகளைத் தானும் பூர்த்தி செய்யாத ஒன்று என்றும், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்களை எந்த வகையிலும் ஈடு செய்வதாக அமையாதது என்றும் பதிவு செய்து இருந்தனர்
அதே போல 10 அக்டோபர் 2014 அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அவர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு வர முடியாது என்று அறிவித்து எழுதிய கடிதத்தில் தமது ஒரு வருட அனுபவத்தில் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு உட்பட்ட 13ஆம் திருத்தம் ஒரு உள்ளடக்கமற்ற வெற்று நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்
குறித்த கடிதத்தின் பந்தி 11 இல் “நாம் ஒரு வருடம் பதவியில் இருந்து வந்துள்ள இன்றைய நிலையில் வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் கூட மாகாண சபை ஆட்சி முறைமை எமது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒரு அதிகாரமற்ற ஓட்டை அமைப்பாகவே தென்படுகின்றது என தெளிவுபடுத்தி இருந்தார்
இது மாத்திரமின்றி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் நல்லாட்சி அரசாங்க அமைச்சர்கள் பங்கு பற்றிய நிகழ்வு ஒன்றில் ஆற்றிய உரையில் “8000 கிலோமீட்டர் உள்ளக வீதிகள் வடக்கு மாகாணத்தில் போடப்பட வேண்டி இருந்தன . ஆனால் மாகாண சபைக்கு 2015 இல் வழங்கப்பட்டு இருந்த மூலதன நிதியை வைத்துக் கொண்டு 7 முதல் 10 கிலோமீட்டர் வீதி தான் போட முடிந்தது என ஆதங்க பட்டு இருந்தார்
அதாவது மத்திய அரசு பார்த்து பிச்சை போட்டால் தான் உண்டு. அவ்வளவுத்துக்குத் தான் மாகாணங்களின் நிதிப் பலம் என வருந்தி இருந்தார்
இது போதாதென்று 27-04-1989 அன்று வடக்குக் கிழக்கு மாகாண சபையில் உரையாற்றிய முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் 13 ஆம் திருத்தத்தின் கீழ் தேசிய பொலிஸ் பிரிவுக்கும் மாகாண பொலிஸ் பிரிவுக்குமுள்ள பொறுப்புக்களைப் பற்றி ஆராய்ந்து விட்டு இவ்வளவையும் தேசிய பொலிஸ் பிரிவு செய்வதாக இருந்தால் மாகாணப் பொலிசுக்கு என்ன வேலை? சம்பளம் வாங்கிப் படுத்து உறங்க வேண்டியது தான் என்று கூறியிருந்தார்.
மேற்குறித்த பதிவுகளை தவிர 13ஆவது திருத்தத்தின் இலட்சணத்திற்கு சான்றாதாரம் வேண்டுமா?
ஆனால் இவர்கள் எல்லோரும் தற்போது 13ஆவது திருத்தத்தைத் தாம் ஏற்றுக் கொள்வது தான் முதல் படி என்றும் இடைக்கால தீர்வு என்று இந்தியா சொல்ல சொல்லுவதால் சொல்லுகிறார்கள்
13 ஆம் திருத்தத்தின் ஊடக சமஸ்டி நோக்கி பயணிப்போம் என சொல்லுகின்றார்கள்
ஒற்றையாட்சி தத்துவத்திற்கு உட்பட்டிருக்கும் 13ஆம் திருத்ததிற்கு பிளஸ் (13+) கேட்க முடியுமா ?
ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் 13 ஆம் திருத்தும் அதியுச்சமான அதிகார பகிர்வு என்று 1987 இல் இலங்கை உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது
அதே போன்று இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் 13 ஆம் திருத்தத்தை ஏற்று கொண்ட பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்று சிலர் கதை சொல்லுகின்றார்கள்
13ஆவது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் எப்போதும் பிரயாணிக்க முடியாது
இது மட்டுமின்றி கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனை ஒரு போதுமே சாத்தியப்படாது
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக இலங்கையின் பாதுகாப்பு வெளியுறவுக் கொள்கையில் முதன்மையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் இந்திய வெளியுறவு அதிகார மையத்திற்குள் நாங்கள் தீர்வை தேடவே எங்கள் ஊடகங்களும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் முயற்ச்சிக்கிறார்கள்