உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் உயிரிழப்புக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷிய படைகள் வேகமாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.
கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் இன்றே வெளியேற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் வான் எல்லை மூடப்பட்டு விட்டதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் வசித்த இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற அந்த மாணவர் குண்டு வீச்சில் பலியாகியிருக்கிறார்.
ராகுல் காந்தி டுவிட்
இந்த நிலையில், இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது; – “ இந்திய மாணவர் நவீன் உக்ரைனில் உயிரிழந்தார் என்ற சோக செய்தி கிடைத்தது. மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பாக மீட்பதற்கு தெளிவான திட்டமிடல் வேண்டும் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பு மிக்கது” எனத் தெரிவித்துள்ளார்