நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பிற்கமைய இந்தோனேஷியா இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.
அதற்கமைய மனிதாபிமான உதவியாக 517.5 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான இந்தோனேஷிய தூதுவர் டெவி கஸ்டினா டோபிங் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு 3.1 மெட்ரிக் தொன் மருத்துவ பொருட்கள் இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன.
இவற்றில் முதற்கட்டம் நேற்று நாட்டை வந்தடைந்தன. இரண்டாம் கட்டம் மே 8 ஆம் திகதியும் ஸ்ரீலங்கா எயா லைன்ஸ் விமான சேவையூடாக ஜகர்தாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைக்கு அமைய இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.