பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்துள்ளது.

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2008 முதல் 2009 வரை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி குறித்த காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து சுனில் ரத்நாயக்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்துள்ளது.

மேலும் இலங்கையில் நடந்த மொத்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக அமெரிக்க எடுக்கும் நடவடிக்கையே இந்த தடை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்ற உறுதிப்பாட்டினையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வழங்கியுள்ளார்.

மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பொது மன்னிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.