யாழ்ப்பாணம், உரும்பிராயில் இன்று இரவு நடந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
மானிப்பாய் – கைதடி வீதியில் இந்த விபத்து நடந்துள்ளது. ஹையேஸ் வாகனமும், சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
உரும்பிராய், அன்னங்கை பகுதியைச் சேர்ந்த 45 வயதான குணசிங்கம் சுதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் கூடியோர், ஹையேஸ் வாகனச் சாரதியைத் தாக்கியுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சென்றபோது, அங்கு பெரும் எண்ணிக்கையானோர் கூடி, அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்த பொலிஸார், விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். மல்லாகத்தைச் சேர்ந்த ஹையேஸ் வாகனச் சாரதியையும் கைது செய்தனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.