கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் Clement Voule கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை பொதுக் கூட்டங்களுக்குத் தடையாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், இலங்கை நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், கொழும்பு – உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் தலைமையகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்புப் படைகள் மற்றும் முப்படைத் தளபதிகளின் தலைமையகம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல இடங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.