வரக்காப்பொலயிலிருந்து கல்குடாவிற்கு கொண்டு வரப்பட்ட 50 ஆயிரம் மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பைச்சேர்ந்த 22, 31, 41 வயதுடைய மூவர் பட்டா ரக சிறிய லொறியுடன் நாவலடியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இம்மூவரும் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளைக் கடத்தி வரப்பயன்படுத்தப்பட்ட பட்டா வாகனமும் கைப்பற்றப்பட்டது.
கல்குடாப் பிரதேசத்தை இலக்கு வைத்து வெளிப்பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான போதைப்பொருள் தொடர்ந்தேர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
அவ்வாறான வகையில் கடத்தப்பட்ட போதைப்பொருள் தொகையே கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் தப்பிக்கா வண்ணம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களையும் போதைப்பொருள் மற்றும் வாகனத்தையும் வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.