கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது என்பதன் அறிகுறி என்று கூறியிருக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை ஒடுக்குமுறைக்கு அல்ல சீர்திருத்தங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை (27) பேரவையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு ;
கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனமும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதானால் பொலிஸாருக்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பதன் அறிகுறிகளாகும்.
இந்த தீர்மானங்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர்களை இலக்குவைத்து கைது செய்வது, அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தைக்கூட பயன்படுத்துவது,போராட்டங்களில் பங்கேற்றவர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக அடாத்தாக கைது செய்வது, எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கு போராட்டங்களை செய்வதற்கான உரிமையை மேலும் கட்டுப்படுத்தும் சட்டங்களை வலுப்படுத்துவது என்று ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பலப்படுத்துவதாக அமைகி்ன்றன.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைப்பு, இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடு, கடுமையான விலைவாசி உயர்வு ஆகியவற்றின் விளைவாக மக்கள் எதிர்நோக்கிய பொருளாதார இடர்பாடுகளின் காரணமாகவே போராட்ட இயக்கம் தோன்றியது.அது ஒன்றும் நாட்டை சீர்குலைப்பதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. சர்வதேச கடன்களை திருப்பிச்செலுத்த முடியாமல்போன பின்புலத்தில் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக தோன்றியதே மக்கள் போராட்ட இயக்கம்.
பொருளாதார நிலைவரம் தொடர்ந்தும் படுமோசமாகிக்கொண்டே போகிறது. அதனால் சமுதாயத்தின் வறிய பிரிவினர் கடுமையாக பாதிக்க்படுகிறார்கள்.மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கம் அக்கறையற்றதாக இருக்கிறது.அதனாலேயே போராட்டங்கள் தொடருகி்ன்றன.
சமாதான காலத்தில் கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கு பயன்படுத்திய சட்டங்களை அரசாங்கம் வாபஸ்பெறவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன.அவற்றின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவேண்டும்.
போராட்ட இயக்கம் தோன்றியதற்கான அடிப்படைக் காரணிகளைக் கையாளவேண்டும் என்றும் முறைமை மாற்றம் மற்றும் ஊழலற்ற நிருவாகத்துக்கான அந்த இயக்கத்தின் கோரிக்கையை கருத்தில் எடுத்து நல்லாட்சி நியமங்கள் உறுதியாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக தற்போது அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் ஆட்சிமுறை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி வாதாடிக்கொண்டிருக்கிறது.இந்த விவகாரங்கள் தொடர்பில் முன்னைய தீர்மானங்களை விடவும் கடுமைவாய்ந்த புதிய தீர்மானம் ஒன்றுக்கு அரசாங்கம் ஜெனீவாவில் முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.எதிர்மறையான தீர்ப்பொன்று நாட்டின் சர்வதேச மதிப்புக்கும் பொருளாதார முதலீடுகள் மற்றும் தொடர் கடன்களின் வடிவில் சர்வதேச ஆதரவைப் பெறுவதில் நாட்டின் ஆற்றலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலை நோக்குடைய அரசியல் தலைமைத்துவப் பண்பை வெளிக்காட்டி சர்வதேச சமூகத்தின் மத்தியில் களங்கமோ அல்லது பொருளாதாரப் பின்டைவுகளோ இல்லாத ஜனநாயக நாடாக இலங்கை மிளிர்வதை உறுதிசெய்யவேண்டும் என்று அவரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.