இலங்கையில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர், தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் குறித்த ஒமைக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆராய்ந்தபோது, அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது. குறித்த நபர் இலங்கைக்கு வந்தபோது, குறைந்தது ஒரு பி.சி.ஆர் பரிசோதனையேனும் செய்திருக்கின்றார்.
விமான நிலையங்களில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது தங்களுக்கும், உலகில் வேறு நாடுகளுக்கும் முடியாமல் போயுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர், நாட்டிலிருந்து வெளியேறிய நபராக எங்களிடம் தகவல் உள்ளது. ஆனால், அவர் எவ்வாறு வெளியேறினார் என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.