களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவரை தாக்கியுள்ளனர்.
நேற்று (31) மாலை களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் விரிவுரைகள் நிறைவடைந்ததையடுத்து முறைப்பாடு செய்த மாணவர் விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, குறித்த சிரேஷ்ட மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரின் தோற்றத்தைக் குற்றம் சாட்டியதுடன், தலைமுடி மற்றும் தாடியை இழுத்து, செருப்பு அணியக் கூடாது, கைக்கடிகாரம் அணியக் கூடாது என மிரட்டியதாக பொலிஸார். தெரிவித்தனர்.
இதற்கு குறித்த மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று சிரேஷ்ட மாணவர்கள் அவரது முகத்திலும், உடலிலும் பலமுறை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான போது அந்த இடத்தில் சுமார் 7 மாணவர்கள் இருந்ததாகவும் அவர்களின் பெயர் விபரங்கள் தெரியவில்லை எனவும், ஆனால் அவர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.