சீதை! நீ பேசு!

சீதையே நீ பேசு
உன் கதையை
நீயே கூறு…!!

உன் கதை கூறும்
கம்பன் எல்லாம்
ஆண் விழி கொண்டே
எழுத்தாணியிட்டான்
பாவை மனதின்
எண்ணங்களை
எள்ளளவும்
எடுத்துரைத்ததாய்
எனக்கு தெரியவில்லை
உன் கதையை நீ கூறு…!!!

விரிந்த சபையில்
உன்னை
விழிக்கு விருந்தாக்கி
வில்லை உடைத்தார்
உன்னைக்
கொள்ளையடித்தார்
அந்த வில்லிலைப் போல்தான்
உன் மனமும்
எதற்கும் வளைந்துக்
கொடுக்கக் கூடியதுவோ….!!!
இல்லை
மந்திர வில்லுடன்
உன்
மனதும் உடைந்துதான்
மெளனம் சுமந்து
போனாயோ….!!!!

நாடு துறந்து காடு செல்வோம்
என்றான்
மறு சொல் இன்றி
அவனுடன் சென்றாய்
அப்போதும் மெளனம்தான்
உன் பதில்
அந்தக் கணமும் உன்
மனதில் எதுவும் உதிக்கவில்லையா
இல்லை
இந்த ஆண் கூட்டங்களின்
போலி ஆராதனைகளை
கணித்து அப்போது
மெளனம் காத்தாயா…!

கடத்தப்பட்டாய் கவரப்பட்டாய்
மாய மான் மீதி
நீ கொண்ட மோகத்தாலே
இராமன் உன்னைக்
காக்க முடியவில்லை என்று
பலியை உன் தலையில்
இடுகின்றார்களே
இதில் எத்தனை
உண்மை….!!!
இதற்கு நீ தானே
பதில் கூற வேண்டும்
மெளனத்திரை விலக்கி….!!!!

கானக்திடையே காத்திருந்த
உன்னை
கணவன் காத்து வந்தான்
சரி
காத்துவந்தவன்
பலிகளுக்கு பலியாக்கினான்
அனல் கக்கும்
தீச்சுவாலையில் கற்பு பரீட்சை
கணப்பொழுதில் பூவானது
அக்கினி
அந்த அக்கினி கூட
உன் மெளனம் எரிக்கவில்லையா
உன் ஆன்மாவை பொசுக்கவில்லையா…!!
இந்த ஆடவர் அதிகாரத்தை
எதிர்க்க உன் மனம் துணியவில்லையா…!!!

மகளின் எடுத்துக்காட்டாய்
மனைவியின் எடுத்துக்காட்டாய்
இருக்க முடிவெடுத்த நீ
ஏன்
ஒரு பெண்ணின் எடுத்துக்காட்டாய்
இருக்க துணியவில்லை
நீ நீயாய் இருந்த கணங்கள்
எங்கே…!!!
இன்றும் உன் பெயர் சொல்லியே
இன்னும் பல பாவைகள்
பலியாகின்றனரே
அதை ஏன் நீ உணரவில்லை….!!!!

அன்று நீ எதிர்த்துக்
கேள்வி கேட்டிருந்தால்
இன்றே
இந்த ஆண் விலங்கு
மனிதத்துவம் அடைந்திருக்குமே
அதை ஏன் நீ மறந்தாய்…!!!

மறந்தாயா இல்லை
மறைக்கப்பட்டதா?
உன் கதை என்ன
நீயே கூறு…!!!
கம்பன் சொன்னதை
கேட்டு நானும்
உன்னைப்போல்
பெண்ணைத் தேடுகின்றேனே
உண்மையில் நீ யார்?

உன் கதை யார்
சொல்வர்
சீதை! நீ பேசு