ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணியமைத்து செயற்பட முடியும் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடாகும். கட்சி மட்டத்தில் அவ்வாறான யோசனைகள் ஏதும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. 

எதிர்வரும் நாட்களில் சுதந்திர கட்சி பரந்துப்பட்ட பலமான கூட்டணியை ஸ்தாபிக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் மக்களின் வெறுப்பினை நாமும் பெற்றுக் கொள்ள நேரிடும் என்பதை பலர் வலியுறுத்தியுள்ளனர்.

சுதந்திர கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒன்றிணைந்து  கூட்டணியமைக்க முடியும் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ள கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடாகும். கட்சி மட்டத்தில் அவ்வாறான தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

சுதந்திர கட்சி எதிர்வரும் நாட்களில் பரந்துப்பட்ட பலமான கூட்டணியை ஸ்தாபிக்கும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முரண்பாடான தன்மையில் காணப்படுகின்றன. 

நிர்வாக கட்டமைப்பு முழுமையாக பலவீனமடைந்துள்ளதால் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

அரசாங்கம் தவறான தீர்மானங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையான தீர்மானங்கள் முழு அரச செயலொழுங்கையும் பலவீனப்படுத்தியுள்ளது என்றார்.