தேசபக்தர்கள் என தங்களை பிரகடனப்படுத்துபவர்கள் நாட்டின் வளங்களை ஒருபோதும் விற்க மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹேரத், நாட்டின் பல வளங்கள் விற்கப்பட்டாலும் அல்லது இரு தரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டாலும் அத்தகைய ஒப்பந்தங்களை ஒரேயடியாக இரத்து செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதென்றும் அதன்பின்னர் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் முழு உரிமையும் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 வருடங்களாக வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இவை இலகுவில் மாற்றியமைக்க முடியாத ஒப்பந்தங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சொந்த தேசிய வளங்களை இலங்கை திரும்பப் பெற வேண்டுமானால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அத்தோடு, நாடு எப்போதாவது அதை திரும்பப் பெற விரும்பினால் இழப்பீடும் கொடுக்க வேண்டும் என்றும் ஹேரத் கூறியுள்ளார்.