சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்றது.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சின் அனுசரணையில் ´ஆயிரம் தேசிய பாடசாலைகள்´ வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பத்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அறிவிப்பதற்கான பெயர்ப் பலகைகள் பிரதமரினால் அலரி மாளிகையிலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக ஒரே தடவையில் திறந்து வைக்கப்பட்டன.
பெலிஅத்த புவக்தண்டாவ தம்மபால மகளிர் பாடசாலை, பிபில யஷோதரா மகளிர் பாடசாலை, தொம்பே தேவி பெண்கள் பாடசாலை, கல்முனை மஹமுத் பெண்கள் பாடசாலை, கெகிராவ வித்யார்த்த மகா வித்தியாலயம், கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம், ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்ட் உயர் பெண்கள் பாடசாலை, தங்கொடுவ பௌத்த மகளிர் பாடசாலை மற்றும் வலஹந்துவ ஜனாதிபதி பெண்கள் பாடசாலை ஆகியன இவ்வாறு தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கப்பட்டன.
புதிதாக இணைக்கப்பட்ட 10 தேசிய பாடசாலைகளுடன் இலங்கையின் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் ஸூம் தொழிநுட்பத்தின் ஊடாக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினர்.
குறித்த நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.