‘பிக் பொஸ்’ பிரபலமும், குணச்சித்திர நடிகருமான மகத் ராகவேந்தரா முதன் முதலில் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ஆர். அரவிந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’. இதில் மகத் ராகவேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை சனா மஹ்புல் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் விவேக் பிரசன்னா, அபிஷேக் ராஜா, திவ்யதர்ஷினி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார்.
காதலையும், பொழுதுபோக்கையும் மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஸ்வேத் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் நடிகர்களும், தயாரிப்பாளர்களுமான நிதின் சத்யா மற்றும் ரவீந்திரன் சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இதன் போது நாயகன் மகத் ராகவேந்திரா பேசுகையில், ” இந்தத் திரைப்படம் என்னுடைய நடிப்பில் தயாராகும் 16ஆவது திரைப்படம். ஆனால் கதையின் நாயகனாக நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். நண்பரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா, கொரோனா தொற்றின் முதல் அலையின் போது எம்மை தொடர்பு கொண்டு, ஒரு காதல் திரைப்படத்தை உருவாக்கலாம் என்றும், இயக்குநர் அரவிந்திடம் கதை கேள் என்றும் கேட்டுக்கொண்டார். இயக்குநர் அரவிந்தும், நானும் இணைந்து ஏற்கனவே இரண்டு முறை திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம்.
ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை. இம்முறை நிதின் சத்யா பரிந்துரைத்ததாலும், அரவிந்தின் திறமை எமக்கு நன்கு தெரியும் என்பதாலும் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். இந்தத் திரைப்படம் காதலையும், பொழுதுபோக்கையும் மையப்படுத்தி தயாராகி இருக்கிறது. நான் சிலம்பரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ரமேஷ் தமிழ்மணி மூவரும் பாடசாலையிலிருந்து பழகி வரும் நண்பர்கள்.
மேஷ் தமிழ்மணி தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு அவர் இசையமைத்திருக்கிறார். அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கிறது.
இப்படத்தின் நாயகியான சனா , எம்முடைய மனைவியின் தோழி. அவரும் இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தயாராகி, வெளியீட்டு சிக்கலில் தவித்த போது, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் ஆதரவு கரம் நீட்டி, இப்படத்தை வெளியிட உதவியிருக்கிறார். அவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
கடந்த தசாப்தங்களில் காதலர்கள் காதலிக்க தொடங்கும் போது அவர்களின் ஒரே நிபந்தனை, ‘திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்பதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் காதலிக்கும் போது பல்வேறு நிபந்தனைகள் இரு தரப்பிலும் விதிக்கப்பட்டு, காதலித்தனர்.
ஆனால் தற்போதைய சூழலில் காதலர்கள் காதலிக்கும் போது திருமணம் என்ற பேச்சை முற்றாக தவிர்த்து விடுகிறார்கள். இந்நிலையில் ‘காதல் கண்டிசன் அப்ளை’ எனும் இந்த திரைப்படம், காதலர்களுக்கும், ரசிகர்களுக்கும் முக்கிய படைப்பாகத் தெரிகிறது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.