இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் இக்குளம் அமைக்கப்பட்டது.

விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி இளைப்பாறிச் செல்வதற்கு இக்குளத்தின் நடுவில் ஒரு நீராழி மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

1942 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் இக் குளத்தினை ஆழமாக கிண்டியபோது ஓர் கல்வெட்டு சாசனம் கிடைக்கப்பெற்றது. இவ் கல்வெட்டில் “கலி 3625 இல் சிங்கையாரியரால் பெருமானுக்கு தீர்த்தம் கொடுக்க இத்திருக்குளம் வெட்டப்பட்டது” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதனசாலையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பரராசகேசர மன்னனின் மருமகனாகிய மகாவித்துவான் அரசகேசரி என்பவர் இக்குளத்தின் நடுவில் அமைந்திருந்த நீராழி மண்டபத்தில் இருந்து இரகுவம்சம் என்னும் வடமொழிக் காவியத்தை இனிய தமிழில் பாடினார் என்ற வரலாறும் இக்குளத்திற்க்கு உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளம் யாரும் கவனிப்பாரற்று இருந்த நிலையில், தற்போது யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பெருமுயற்சியில் கொடையாளர் அருந்தவநாதன் அனோசன் என்பவருடைய நிதி அனுசரணையில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.