நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. சூழ்ச்சிகளால் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு-நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கட்கிழமை (டிச.12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது. மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைந்து அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சட்டத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம்.
நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளோம்.
முதலாவது மனுவை சுதந்திர மக்கள் காங்கிரஸ் சார்பில் நானும் (ஜி.எல் பீரிஸ்), ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தாக்கல் செய்துள்ளோம். இரண்டாவது மனுவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தாக்கல் செய்துள்ளார்கள்.
நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தேர்தலை உரிய வேளையில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்துகிறதா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் நிர்வாகத்தை நாட்டு மக்கள் நான்கு வருட காலத்திற்கு மாத்திரம் தெரிவு செய்தார்கள். 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
அரசியலமைப்பின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அதிகாரங்களை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போட்டார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முன்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களும் புதிதாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்,அவ்வாறாயின் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தேர்தலை உரிய காலத்தில் நடத்த சட்டத்தின் ஊடாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு கிடையாது. பாராளுமன்றத்தின் செயற்பாடுகளினால் மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆகவே உள்ளூராட்சி மன்ற சபை தேர்லையும் பிற்போட இடமளிக்க முடியாது என்றார்.