பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தானும் இலங்கையைப் போன்ற நிலையை எதிர்கொள்ளும் என முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் (பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி) அரசு கவிழ்ந்ததையடுத்து, ஷாபாஸ் ஷெரீஃப் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி) புதிய பிரதமராக அண்மையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், ஷாபாஸ் ஷெரீஃபின் அரசை இம்ரான் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் சவூதி அரேபியாவிலுள்ள மெதினா மசூதியில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக கோஷமெழுப்பப்பட்ட விவகாரத்தில் இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேசுகையில், ´தற்போதுள்ள கூட்டணி அரசாங்கம் திசையில்லாமல் போய்விட்டது. தற்போதைய நிலைமையை கையாள முடியாமல் போய்விட்டது. எனவே, தற்போதைய அரசு நவாஸ் ஷெரீப்பை திரும்ப அழைக்க வேண்டும். இல்லையெனில் இந்த நாடு கடனில் மூழ்கும் நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், நிலைமையை சமாளிக்க நாங்கள் ஏற்கனவே திட்டத்தை வகுத்துள்ளோம். அவ்வாறு இம்ரான் கைது செய்யப்பட்டால், தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையாக பாகிஸ்தானும் மாறும்´ என்று பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு பேரணியில் பேசியுள்ளார்.
ஷேக் ரஷீத் அகமது, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து பிரிந்த அவாஸி முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனரும் தலைவரும் ஆவார். மேலும், இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு இது தோழமைக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.