பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ‘ஐஸ்’ என்ற போதைப்பொருள் பழக்கத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் போதைவஸ்து வியாபாரிகள் தீவிரம் காட்டி வருவதாக நாடெங்குமிருந்து தகவல்கள் வருகின்றன. இந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானதாகும். எமது எதிர்கால சந்ததியினரை இருளுக்குள் தள்ளுகின்ற இம்முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இதன் பாதிப்பு மிக மோசமானதாகவே இருக்கும்.

இலங்கையில் போதைவஸ்துப் பாவனையாளர்களால் ஐஸ் என்ற போதைப்பொருளே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போதைப்பொருளே வெளிநாடுகளில் இருந்து தற்போது அதிகளவில் இலங்கைக்குக் கடத்தி வரப்படுவதாகத் தெரியவருகின்றது. ஐஸ் போதைப்பொருள் பாவனையே பாடசாலை மாணவர்கள் பலரிடம் காணப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

பாடசாலை மாணவர்களில் ஆண்கள் பலரிடம் மாத்திரமன்றி பெண்களிடமும் இப்பழக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகள் பணமீட்டுவதற்கு முயற்சிப்பதை அறிய முடிகின்றது. இளவயதினரை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவது இலகுவானதென்று போதைப்பொருள் வியாபாரிகள் கருதுவதாகத் தெரிகின்றது. எனவேதான் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை விற்பனை செய்வதில் போதைப்பொருள் வியாபாரிகள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் ஆபத்தில் இருந்து எமது எதிர்கால சமுதாயத்தைக் காப்பாற்றுவதில் அனைத்துத் தரப்பினரும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். போதைப்பொருள் ஆபத்து குறித்து சமூகமட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடம் மாத்திரமன்றி, பெற்றோர் மற்றும் சமூகநலன்விரும்பிகள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வு நடவடிக்ைககள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதில் பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும் பாரிய பங்கு காணப்படுகின்றது. மாணவர்களை வீட்டுச் சூழலில் பெற்றோரும், பாடசாலைச் சூழலில் ஆசிரியர்களும் கண்காணிப்பது மிகவும் அவசியம். மாணவர்களின் அன்றாட நடத்தையில் மாற்றமெதுவும் தென்படுகின்றதா என்பதை அவதானிக்க வேண்டும். அவ்வாறு மாற்றமெதுவும் தென்படுமானால் அது குறித்து உரிய தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டியது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகும்.

மாணவர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளாரெனத் தெரியவந்ததும் அதனை ஆசிரியர்கள் அலட்சியப்படுத்துதல் கூடாது. அம்மாணவரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுத்து நல்வழிப்படுத்துவதற்கு ஆசிரியர்களும் அதிபரும் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். இதனை ஒரு சமூகக்கடமையாக ஆசிரியர்களும் அதிபரும் நிறைவேற்ற வேண்டும்.