தொழிற்சங்கங்களின் இந்த போராட்டம் என்பது, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்யப்படும் போராட்டம் என்று வைத்தியபீட பேராசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கமைப்பாளர் பேராசிரியர் இந்திக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களில் வரலாற்றில் இன்றைய நாளானது மிகவும் முக்கியத்துவமிக்க நாளாக அமைந்துள்ளது.
அசாதாராணமாக வரி அறவீட்டு முறைமைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இது உண்மையில் தொழிற்சங்கங்களின் வரலாற்றிலும் சரி தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிலும் சரி மிக முக்கியமான நாளாகக் காணப்படுகின்றது.
தொழிற்சங்கங்களின் இந்த போராட்டம் என்பது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்யப்படும் போராட்டம் என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அவ்வாறு இல்லாமல் தங்களது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக செய்யப்படும் போராட்டமல்ல.
அசாதாரண வரி அறவீட்டுக்கு முறைமைக்கு எதிராகவே தொழிற்சங்கங்கள் போராடுகின்றன.
தொழிற்சங்கவாதிகளை இந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்கும் வகையில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மின்சார சபை ஊழியர்களை பாதிக்கும் வகையிலேயே தற்போதைய அரசாங்கமானது செயற்பட்டு வருகின்றது.
இறுதியாக வாழ்வாதாரச் சுமை அதிகரிப்பதும் பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சியடைவதும் நடக்கப்போகின்றது.
எனவே அசாதாரண வரி அறவீடு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
சகல வருவாயிலும் அநீதியாக வரி அறவிடுவதை நிறுத்த வேண்டும் என்பதையே நாம் கோரிக்கையாக முன்வைத்துள்ளோம்.