நாட்டில் மறு அறிவித்தல் வரை எவ்வித மின் தடையும் திட்டமிடப்படவில்லை என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாய்க்க இதனை தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பில் இன்று (31) மீளாய்வு நடத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலைமை குறித்து இன்று பிற்பகல் கலந்துரையாடப்பட்டு மின்வெட்டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் உறுதியான அறிக்கை வெளியிடப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
நாளாந்த மின் உற்பத்தி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இன்று வரை மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நாட்டில் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க மின்சார சபைக்கு உறுதியான திட்டம் இல்லாத காரணத்தினால் மின்வெட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.