ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க உட்பட 4 பேரை ஜூன் மாதம் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (25) கட்டளையிட்டார்.
எம்.பிக்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ நகரசபை ஊழியர் ஒருவருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதியன்று கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இருவரும் கைதுசெய்யப்பட்டு, இன்று (25) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவரையும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக உள்ளிட்ட 22 பேரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சி.ஐ.டி) கடந்த 17ஆம் திகதி பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்குறிப்பிட்டோரை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் சஞ்ஜெய் ராஜரட்ணம், திங்கட்கிழமை (16) பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது