வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிர்வகிக்க அல்லது வழிகாட்டுவதற்கு வர்த்தக அமைச்சின் இயலாமை குறித்த அதிருப்தி மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக அமைச்சின் செயலாளராக பணியாற்றுவதற்கு மேலதிகமாக, ஜயவர்தன பல நிறுவனங்களின் தலைவராகவும் பல நிறுவனங்களின் சபைகளிலும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, செயலாளரின் பங்களிப்பை ஜனாதிபதிக்கு அறிவித்து, திறமையான அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பல தடவைகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜயவர்தனவின் பதவி நீக்கம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி ஆகியவற்றின் இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, வர்த்தக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.