விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து கொண்டாடுவார் என்று நம்புகிறேன் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்
இந்தியாவின் சார்பாக சச்சின் டெண்டுல்கர் (200), ராகுல் டிராவிட் (163), விவிஎஸ் லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132), கபில்தேவ் (131), சுனில் கவாஸ்கர் (125), திலீப் வெங்சர்க்கார் (125), திலீப் வெங்சர்க்கார் (116) சவுரவ் கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103), மற்றும் வீரேந்திர சேவாக் (103) ஆகியோர் இது வரை இந்திய அணிக்காக 100 அல்லது 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:
விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து கொண்டாடுவார் என்று நம்புகிறேன். பல பேட்ஸ்மேன்கள் இது வரை அதைச் செய்யவில்லை. 100 டெஸ்ட் போட்டிகளில் முதலில் விளையாடிய கொலின் கவுட்ரே, தனது 100வது டெஸ்டில் சதம் அடித்தார் என்பது எனக்குத் தெரியும். அதன் பிறகு ஜாவேத் மியான்டட் மற்றும் அலெக்ஸ் ஸ்டீவர்ட் அதை செய்துள்ளனர்.
நான் எனது 100-வது டெஸ்ட் போட்டியில் 48 ரன்களில் பேட்டிங் செய்தபோது ஸ்கொயர் லெக்கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தேன்.
ஒரு வீரராக நீங்கள் விளையாடும் எந்த விளையாட்டிலும் ரசிகர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். அப்படி இருக்க 100வது டெஸ்ட் போட்டி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பது ஏமாற்றமளிக்கிறது.