ஹோட்டல் சுவையில் சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
- தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
- பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
- வெள்ளைப் பூண்டு – 1 பல் (பெரியது)
- கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
- மசாலா பொடி – 1&1/2 ஸ்பூன்
- கரம் மசாலா பொடி – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தாளிக்க நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டீ ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் 1/2 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கீற்று
- பாம்பே சாம்பார்
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து நேராகக் கீறிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்டமாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை அலசி சிறிது துண்டாக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கடலை மாவினை 1/2 டம்ளர் தண்ணீரில் கட்டிகள் ஏதும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
1/2 நிமிடம் கழித்து அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வெந்ததும் அதில் வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பின்னர் அதனுடன் மசாலாப் பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும்.அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலாப் பொடிகளின் பச்சை வாசனை நீங்கியதும், கரைத்து வைத்துள்ள கடலை மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி சேராதபடிக் கிளறவும்.
அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து மூடி போட்டு 3-4 நான்கு நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
மூடியைத் திறந்துப் பார்க்கும்போது தேவையான பதம் வந்ததும், அடுப்பினை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும்