13 ஆவது சீர்த்திருத்தம் என்பது, இந்நாட்டில் அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலான இந்திய-இலங்கை புரிந்துணர்வினூடாக ஏற்படுத்திக்கொண்ட ஓர் உடன்படிக்கையாகும் எனினும் அந்த உடன்படிக்கை தற்போது செய்றபடுத்தப்படுவதில்லை என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”2021ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது.

2022ஆம் ஆண்டில் முறையாக திறமையாக செயற்படக்கூடிய ஒரு கட்சியாக செயற்படுவதற்கே
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது.

இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

2022ஆம் ஆண்டு என்பது தேர்தல் ஆண்டாகும். 2022ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்துக்குப் பின்பு மாகாணசபை உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தலையும் நடத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்துக்கு அமைவாகவேஇ மாகாணசபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

13ஆவது சீர்த்திரு;ததம் என்பது இந்நாட்டில் அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலான இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் புரிந்துணர்வினூடாக ஏற்படுத்திக்கொண்ட ஓர் உடன்படிக்கையாகும்.

எனினும் தற்போது இந்த உடன்படிக்கையினூடாக அதிகாரங்கள் பரவலாக்கப்படவும் இல்லை.
மாகாணசபைகளும் இயங்கவில்லை.

அதேபோன்று இந்திய-இலங்கை உடன்படிக்கையும் செயற்படுத்தப்படுவதில்லை.

எனவே ஒருசில குறைபாடுகள் காணப்பட்டாலும் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் மாற்றங்களைக் கொண்டு 2022 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறே அரசாங்கத்திடம் நாம் கோருகின்றோம்.

எனவே 2022 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள் நடைபெறக்கூடிய ஆண்டாகவே நாம் கணக்கிடுகின்றோம்.

எனவே அதற்காக ஐக்கிய மக்கள் சக்தியானது அடிமட்டத்திலிருந்து கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலையில் 130 அமைப்பாளர்களை நியமித்துள்ளோம்.

அதேபோன்று எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அடிமட்டத்தில் கட்சியை கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.