2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் மாபெரும் பயிரிடும் எழுச்சி ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று 924 காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

´தற்போது பெரும்பாலானோர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பெயில் என கூறுகின்றனர். அவர்கள் கூறுவது போல் எவரும் பெயில் ஆக வில்லை. பெயில் ஆகுவதாக இருந்திருந்தால் கொவிட் காலப்பகுதியில் அது நடந்திருக்க வேண்டும். அதிலும் அரசாங்கம் பெயில் ஆகவில்லை. கொரோனாவால் சில குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கடந்த நல்லாட்சி காலத்தில் கொரோனா போன்ற தொற்றுகள் ஏற்படவில்லை எனினும் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

சஹ்ரானின் குண்டு தாக்குதல் காரணமாகவே நன்றாய் இருந்த நாடு சீர்குழைந்தது. இன்று எந்தவொரு அபிவிருத்தி வேலைத் திட்டத்திலும் தொய்வு ஏற்படவில்லை. சஹ்ரானின் குண்டு தாக்குதல் காரணமாக 4.5 பில்லியன் இல்லாமல் போனது. கொரோனா மீகுதியை இல்லாமல் செய்துள்ளது.

இன்று நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. அதன் காரணமாகவே இந்த கஸ்டம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ தற்போதைய சூழ்நிலைக்கு முகம் கொடுப்பது அவசியமானது. எப்போதும் வறட்சி இருக்க போவதில்லை வசந்த காலம் ஒன்று வரும். 2022 ஆம் ஆண்டு முதல் வசந்த காலம் ஆரம்பமாகும். 2022 முதல் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் எம்மால் உயரமான இடத்திற்கு செல்ல முடியும்´ என்றார்.