இந்தியாவில் ஒரு நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிறுநீரகங்களுக்குள் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்புகளின் கடினமான படிவுகளால் சிறுநீரக கற்கள் உருவாகின்றது.

தவறான உணவு பழக்கம், அதிக எடை மற்றும் சில மருந்துகளால் கூட சிறுநீரக கற்கள் உருவாகலாம், இவற்றால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது.

எனவே இக்கற்களை வலி நிவாரணிகள் மூலமும், சிலருக்கு சிகிச்சை மூலமும் மருத்துவர்கள் அகற்றுகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர், அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது சிறுநீரகத்தில் பெரிய அளவில் கல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் லேபர்ஸ்கோபி(laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் கற்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் மூன்று மணிநேர சிகிச்சையின் மூலம், அவரது சிறுநீரகத்தில் இருந்த 156 கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், நோயாளிக்கு இரண்டு ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை இருந்துள்ளது, ஆனால் அவர் இதற்கு சிகிச்சை பெறவில்லை, அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டதால் தான் அவர் தற்போது மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

மேலும் நம் நாட்டிலேயே பெரிய அளவிலான அறுவை சிகிச்சை இல்லாமல் லேபர்ஸ்கோபி(laporscopy) மற்றும் எண்டோஸ்கோபி(endoscopy) மூலம் இத்தனை கற்களை அகற்றியது இது தான் முதல் முறை” என்று கூறியுள்ளனர்.