சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது கூட்டமைப்பின் குழுவும் அல்ல. ஏனென்றால் அதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது தமிழரசுக்கட்சியின் குழுவும் அல்ல. ஏனெனில் இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களோடு உரையாடப்படவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் இந்தக் குழு யார் சார்பாக அமெரிக்காவுக்கு செல்கிறது?

முதலில் இக்குழு அமெரிக்காவுக்குச் செல்லும் காலத்தின் பின்னணியை பார்க்க வேண்டும். அரசாங்கம் ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவரப் போவதாக சீரியஸாக சொல்லிக்கொண்டு வருகிறது. இரண்டாவதாக அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக கூறி வருகிறது. மூன்றாவதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டுடன் இணைந்து ஒரு முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை இந்தியாவுக்கு அனுப்பும் அந்த முயற்சியில் ரவுப் ஹக்கீமும் மனோ கணேசனும் இணைந்திருக்கிறார்கள். இந்த முயற்சியில் இதுவரையிலும் தமிழரசுக்கட்சி இணையவில்லை.

மேற்சொன்ன மூன்று விவகாரங்களின் பின்னணியில்தான் தமிழ் சட்டவாளர்கள் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. எனவே மேற்சொன்ன மூன்று விவகாரங்களையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். அரசாங்கம் ஒரு யாப்பை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவுக்கு இல்லை. எனினும் அரசாங்கம் ஒரு யாப்பை கொண்டு வரப்போவதாக ஒரு தோற்றத்தை கட்டி எழுப்புகிறது. ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அப்படி ஒரு தோற்றத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு. அரசாங்கம் ஒரு யாப்பை மெய்யாகவே கொண்டுவரும் என்று நம்பத்தக்கதாக கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சி அமையவில்லை.

அப்படி அரசாங்கம் மெய்யாகவே ஒரு யாப்பை கொண்டுவருமாக இருந்தால் அந்த யாப்பானது தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கும் ஒன்றாக அமையப் போவதில்லை.ஏனெனில்,தனிச் சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஆட்சிக்கு வந்ததாகக் கூறிக் கொள்ளும் ஒரு அரசாங்கம் இது. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு பல்லினத்தன்மை மிக்க ஒரு தீர்வை முன்வைக்காது. ஏனெனில் தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனப்படுவது பல்லினத்தன்மைக்கு எதிரானது. அப்படி என்றால் அரசாங்கம் எப்படிப்பட்ட ஒரு யாப்பை கொண்டு வரப்போகிறது? நிச்சயமாக அது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களைத்த தராத ஒரு யாப்பாகத்தான் இருக்கப்போகிறது. அப்படி ஒரு யாப்பை அவர்கள் பொதுசன வாக்கெடுப்புக்கு விடும்பொழுது நிச்சயமாக தமிழ் மக்கள் அதனை எதிர்ப்பார்கள்.

அரசாங்கம் இவ்வாறு ஒரு புதிய யாப்பை கொண்டுவரக்கூடிய ஒரு பின்னணியில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு வெளியரசுகளை கையாள வேண்டிய ஒரு தேவை தமிழ்த் தரப்புக்கு உண்டு என்று சம்பந்தரும் சுமந்திரனும் கருதுகிறார்களா? அந்த அடிப்படையில் பார்த்தால் மூன்று சட்டவாளர்கள் அமெரிக்காவுக்கு செல்வது பொருத்தமானதே இது முதலாவது.

இரண்டாவது மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தப்போவதாக கூறுகிறது. ஆனால் இப்போது இருக்கும் நிலைமைகளின்படி மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தெற்கில் அரசாங்கத்திற்கு அது விஷப்பரீட்சையாக அமையலாம் என்பதனால் வடக்கு கிழக்கில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கலாம்.ஆனால் அங்கேயும் பிரச்சினை உண்டு. வடக்கு-கிழக்கு என்று விசேஷமாக மாகாணசபை தேர்தலை நடத்தினால் அது தமிழ் மக்களுக்கு என்று விசேஷ பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக் கொள்வதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விசேஷமான ஏற்பாடுகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்வதாகவும் அமைந்துவிடும்.இது அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டம் கோட்பாட்டுக்கும் தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் எதிரானது.அப்படிப்பார்த்தால் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

எனினும்,இந்த சிக்கலைக் கடப்பதற்கு இலகுவான ஒரு வழியுண்டு. இப்போதுள்ள கோறையான மாகாணசபையை மேலும் கோறையாக்கி புதிய யாப்புக்குள் உள்வாங்குவதன்மூலம அந்தப் பிரச்சினையை அவர்கள் கடக்கலாம்.அதன்மூலம் இந்தியாவையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம்  ஐநாவையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்று அரசாங்கம் கருத இடமுண்டு. எனவே மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கக்கூடும் என்று ஊகங்களின் பின்னணியில் வைத்து சிந்தித்தால் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவை தமிழ்த் தரப்புக்கு உண்டு. இது இரண்டாவது.

மூன்றாவது தமிழ்தேசிய பரப்பிலுள்ள ஐந்து கட்சிகள் இணைந்து முன்வைக்கும் கோரிக்கையானது இந்தியாவை மறுபடியும் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக தலையிட வைத்து ஈழத் தமிழர்களின் பேரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலானது என்று மேற்படி கட்சிகள் கூறுகின்றன.தமிழ் மக்களின் பேரபலத்தை அதிகப்படுத்தும் விதத்தில் இந்தியாவை அணுக வேண்டிய தேவை உண்டு என்பதனை தமிழரசுக் கட்சிக்குள்ளும் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் சிறிய பங்காளிக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் தமிழரசு கட்சி இழுபடுவதா என்ற ஒரு ஈகோ பிரச்சினை இங்கு உண்டு. இதுவிடயத்தில் சுமந்திரனையும் சம்பந்தரையும் பொருத்தமான விதங்களில் உள்ளீர்த்து இருந்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகள் பெருமளவுக்கு தவிர்க்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது விவகாரம் வேறு ஒரு திசையில் செல்லத் தொடங்கிவிட்டது. பங்காளிக் கட்சிகளின் கூட்டு முயற்சிகளை மேவிச் செல்வதற்கு சுமந்திரன் அமெரிக்க பயணத்தை முன்னிலைப்படுத்துகிறாரா? என்ற ஐயங்கள் உண்டு.

இப்போதுள்ள பூகோள யதார்த்தத்தின்படி அமெரிக்காவும் இந்தியாவும் பங்காளிகள். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நகர்வுகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது. இலங்கை இனப் பிரச்சினையிலும் இந்தியாவின் முடிவுகளை அனுசரித்து அமெரிக்கா செயல்படும். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை எனப்படுவது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்டது.சொல்ஹெய்ம் கிளிநொச்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தைகளின் முடிவில் அது குறித்த விவரங்களை இந்தியாவுக்குச் சென்று அறிக்கையிட்ட பின்னரே நாட்டுக்கு திரும்புவார்.இந்த நிலைமை இப்பொழுதும் உண்டு. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவை மீறி அமெரிக்கா மட்டுமல்ல வேறு எந்த நாடும் தலையிடக்கூடிய ஒரு நிலைமை கிடையாது.

எனவே ஒரே கூட்டுக்குள் இருக்கும் வெவ்வேறு கட்சிகளில் ஒரு பகுதி இந்தியாவையும் ஒரு பகுதி அமெரிக்காவை நோக்கி செல்வதை எப்படி பார்ப்பது? இருப்பதோ மொத்தம் 13 உறுப்பினர்கள். இந்தப் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலும் ஒருங்கிணைவு கிடையாது. 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பக்கம்.ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னொருபக்கம்.இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு பக்கம். இப்படியே திக்குத் திக்காக நின்றுகொண்டு பிராந்தியத்தையும் அனைத்துலக சமூகத்தையும் எப்படிக் கையாள்வது? தமிழ் மக்கள் தங்களுடைய பேரத்தை எப்படி அதிகப்படுத்துவது?

இந்தியா தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் தன்னை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது.அமெரிக்கா தமிழ் பிரதிநிதிகளை அழைத்து பேசுவதன்மூலம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க விழைவது தெரிகிறது. அப்படி என்றால் பிராந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ் மக்களின் அரசியலை கையாள வேண்டிய ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது என்று தெரிகிறது. இப்படிப்பட்டதொரு ராஜியச் சூழலை வெற்றிகரமாக கையாள்வதற்கு முதலில் தமிழ் தரப்பு ஒரு கூட்டாக முடிவு எடுக்கவேண்டும். அரங்கில் உள்ள மூன்று கட்சிகளும் இணைந்து வெளியுறவு நடவடிக்கைகளுக்கான ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். பிராந்தியத்தையும் அனைத்துலகத்தையும் அணுகுவதற்கு உரிய பொருத்தமான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு துறைசார் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு வெளியுறவுக் கொள்கை வரைவு குழுவை உருவாக்க வேண்டும்.அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு வெளியுறவுக்கொள்கையை வைத்துக்கொண்டுதான் வெளி அரசுகளை அணுக வேண்டும்.

ஆனால் நடப்பதோ வேறு. ஒரே கூட்டுக்குள்ளே இருவேறு ஓட்டங்கள். இவ்வாறான வெவ்வேறு ஓட்டங்களுக்கு அடிப்படை காரணம் தமிழரசுக் கட்சிதான். கூட்டமைப்புக்குள் பெரிய கட்சி அது. மூத்த கட்சி அது. தனது மூப்பின் பிரகாரம் ஒரு மூத்த சகோதரன் இளைய சகோதரர்களை அரவணைத்து செல்வதுபோல முடிவுகளை எடுத்து கூட்டமைப்பின் ஐக்கியத்தை இறுக்கமாகப் பேணியிருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி பொறுப்போடும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடக்க தவறியதன் விளைவுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு ஓட்டங்கள் ஆகும். இப்பொழுது அரங்கிலிருக்கும் மூன்று பெரிய கட்சிகளும் ஏற்கனவே கூட்டமைப்புக்குள் இருந்து உடைந்து போன கட்சிகள் தான். அதற்கு தமிழரசுக் கட்சிதான் பெருமளவுக்கு பொறுப்பு. ஒரு மூத்த கட்சியாக பெரிய கட்சியாக உரிய பக்குவத்தோடு தீர்க்கதரிசனத்தொடு அக்கட்சி கூட்டமைப்புக்குள் ஐக்கியத்தை பேணத் தவறிவிட்டது.கடந்த 12 ஆண்டுகளில் அக்கட்சி தொடர்ந்து உடைந்து கொண்டே போகிறது. கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தமைக்கு அதுவே காரணம்.இவ்வாறு தமிழ்த்தரப்பு பல கூறாகச் சிதறிக் கிடந்தால் வெளித்தரப்புக்கள் ஒவ்வொன்றும் தமிழ்த் தரப்பை தனித்தனியாக கையாள முயலும். இது தமிழ்த் தரப்பின் பேர சக்தியை தொடர்ந்தும் கீழ் நிலையிலேயே வைத்திருக்கும்.