கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் மிகவும் தளர்வான சுகாதார வழிகாட்டல்களே பின்பற்றப்பட்டு வருவதாகவும், பரிசோதனைகளை தவிர்த்து பயணிகள் வெளியேறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆபிரிக்க நாடுகளில் பதிவான ஒமிகோர்ன் திரிபு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாட்டை தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போக்கினை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் அவை மிகவும் மெத்தனப்போக்கில் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இதனால் புதிய திரிபில் தாக்கப்பட்ட பயணிகள் எவரும் நாட்டுக்குள் பிரவேசிக்க கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்