கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ‘உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நகர்ப்புற குறைந்த வசதிகளை கொண்ட மக்களுக்காக 2024ஆம் ஆண்டளவில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம்.

அதற்கமைய தற்போது 14,083 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினருக்காக 1108 வீடுகளை 2021ஆம் ஆண்டில் பயனாளர்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 13 வீட்டுத் திட்டங்களின் ஊடாக 6128 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வீட்டுத்திட்டங்களுக்கு அமைய, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினாலும் 3 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையை குறிப்பிட வேண்டும். இதனூடான 928 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

‘உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுத் திட்டத்தின் கீழ், நாட்டின் 14022 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி ஆண்டுதோறும் ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 71,110 ஆகும்.

அத்துடன், ‘சியபத் தொடர்மாடி குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2022ஆம் ஆண்டு முதல் தோட்ட மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய நிதி உதவி திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க வேண்டும். என்றார்.