நுவரெலியாவில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நுவரெலியா- ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மகள் மற்றும் மருமகன்களுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு உறங்கிக் கொண்டிருந்த தாய் காலையில் பார்க்கும் பொழுது வீட்டில் இல்லை என உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீட்டிற்கு அருகில் உள்ள பிளாக்பூல் ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.