கணித பாடத்தில் உயர் தரத்திலும் சாதாரண தரத்திலும் ஹாட்லி கல்லூரி பல தடவைகள் சாதனை நிகழ்த்திய பாடசாலை என்பது உலகறிந்த உண்மை. கணிதத்தில் உச்சம் தொட்டு பிரசித்தி பெற்ற பேராசிரியர் C .J . Eliezer, பேராசிரியர் அ. துரைராஜா போன்றோரை உருவாக்கியதும் ஹாட்லி கல்லூரிதான். 1981 இல் உயர் தரத்தில் நான்கு பாடங்களிலும் அதி உயர் சித்தியுடன் 360 புள்ளிகளை பெற்று நாட்டு மக்கள் எல்லோரது புருவங்களையும் உயரச் செய்து ஆச்சரியப் படுத்தினார் ஹாட்லியில் பயின்ற இராமகிருஷ்ணன் என்ற கணிதப் பிரிவு மாணவன். கணித பிரிவைச் சேர்ந்த ஹாட்லி கல்லூரி மாணவனான குகராஜா 366 புள்ளிகளை பெற்று அந்த சாதனையையும் 1983ல் முறியடித்திருந்தார். இந்த சாதனைகளுக்கெல்லாம் அதிபர்களும், பல ஆசிரியர்களும் பக்க பலமாக நின்றிருந்தனர். அவர்களிலே அந்த நாட்களில் (1975 -1985) உயர்தர கணித பாடத்திற்கு ஹாட்லியின் இளைப்பாறிய அதிபரான திரு. இரத்தின சபாபதி, திரு. குணசீலன், திரு. கணேசலிங்கம் போன்றோர்களின் பங்களிப்பு மறக்க முடியாதது. இவர்களிடம் கற்ற மாணவர்கள் பல சாதனைகள் செய்து சிறப்பான பதவிகளில் இருக்கின்றனர் என்பது ஊர் அறிந்த உண்மை. அந்த மாணவர்களுக்கெல்லாம் தரம் ஆறில் இருந்து தரம் பத்து வரைக்கும் சரியான அத்திபாரம் இட்டவர்களில் புகழ் பூத்த கணித ஆசான் திருவாளர் J. S. ராஜரட்ணம் முதன்மையானவர் என்றால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஜே.எஸ். இராஜரட்ணம் ஆசிரியரை நினைத்துப் பார்க்கிறேன். வயதானாலும் வழுக்கை இல்லாத தலை. விகிடெடுத்தது அழகாக சீவப் பட்டிருக்கும் தலைமுடி. வெள்ளை வெளேரென்ற உடல். முகத்தில் கருமையான ஒரு மச்சம். ஆங்காங்கே கருமை நிற தேமல். மூக்கு கண்ணாடி. அயன் பண்ணப் பட்ட shirt. Pleat வைக்கப் பட்ட வெள்ளை நிற அல்லது மெல்லிய நிறமுடைய trouser. இடுப்பில் இரண்டு பக்கத்திலும் buckle பண்ணப் பட்டிருக்கும். காலில் leather செருப்பு. ஒரு பழைய சைக்கிளில் வருவதுதான் நினைவில் வருகிறது. கடற்கரைக் காற்று. அதனை எதிர்த்து சைக்கிளை ஓடுவதற்காக சற்று முன்னே குனிந்து உளக்கியபடி சைக்கிளை செலுத்துகிறார். பாடசாலை வாசலில் நிறுத்தி இறங்கி உருட்டியபடி உள்ளே வருகின்றார். சைக்கிளை நிறுத்து பூட்டி விட்டு கையில் உள்ள மணிக்கூட்டை (Roamer மணிக்கூடாக இருக்கலாம்) பார்க்கிறார். பாடசாலை காரியாலயத்தில் வரவை பதியப் போகையில் 1st bell அடிக்கிறது. நேர கட்டுப்பாட்டில் அவ்வளவு துல்லியம்.

தூரத்தில் அவர் வருவதைப் பார்த்தவுடன் அவரது வகுப்பு அமைதியாகவும். அவ்வளவு கடுமையானவர். கையிலே பிரம்பு இருந்தாலும் அதனை பாவிக்க வேண்டிய தேவைப் பாடு வருவதில்லை. மாணவர்களுக்கு அவ்வளவு பயம் இருந்தது. ஆழ் மனதில் அன்பும் இரக்கமும் இருப்பினும் அதனை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. மாணவர்களைக் கட்டுப் பாட்டில் வைத்திருந்தால்தான் கற்பிக்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கலாம். அவரது மாணவர்கள் கணிதத்தில் எடுக்கும் புள்ளிகள் அவரது கட்டுப்பாட்டினூடாக கற்பிக்கும் முறை சரியானதே என்பதை நிரூபிக்கும் வண்ணமே அமைந்தது. வார்த்தைகள் தெளிவாக இருக்கும். சிறு சிறு உத்திகளை செம்மையாக சொல்வார். சிக்கலான கணக்குகளை விலாவாரியாக விளக்குவார். சொல்லும் போது தலை அக்கம் பக்கமாக சிறுதளவு ஆடும். ஐம்பது மாணவர்கள் இருப்பினும் அனைவரையும் தன்னை நோக்கி கவரும் அற்புதம் தெரிந்தவர். இதனால்தான் அவரிடம் பயின்றவர்களில் பெரும்பாலானோர் கணிதத்தில் புலிகளாயினர். வகுப்பில் அடிக்கடி பரீட்சை. புள்ளிகள் குறைந்தால் விளாசல். இதனால் எப்படியாவது சித்திக்கு தேவையான புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களை திருப்பினார். பெரு வெற்றியும் கண்டார்.

பாடசாலை விளையாட்டுப் போட்டி தொடங்கினால் ராஜரட்ணம் sirஇனால் மாணவர்களுக்கு மேலதிக கட்டுப்பாடு விதிக்கப்படும் . பாடசாலை முடிய மைதானத்திற்கு சென்று பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த விளையாட்டு தெரியுமோ அதில் பயிற்சி செய் என்பார். எதுவுமே வரவில்லை என்றால் March-past இல் சேர் என்பார். அதுவும் Sherrard House என்றால் தப்பவே முடியாது. அந்த House இற்கு அவர்தான் பொறுப்பாசிரியர்.

பல கட்டுமான பொறியியலாளர்கள் உருவாவதற்கு அத்திவாரம் போட்டவர் எங்கள ராஜரட்ணம் மாஸ்டர். பல வைத்தியர்கள் உருவாவதற்கு முள்ளந்தண்டாக இருந்தவர் எங்கள ராஜரட்ணம் மாஸ்டர். நற் பிரஜைகள் உருவாவதற்கு நல்லாசானாக இருந்தவர் எங்கள ராஜரட்ணம் மாஸ்டர். மீண்டும் வடமராட்சி மண் ஒரு நல்லசானை இழந்திருக்கிறது. குழம்பிய மனத்துடனும் கலங்கிய கண்களுடனும் உங்களை அனுப்பி வைக்கிறோம். நீங்கள் விரும்பித் தொழுத இறைவன் உங்களை என்றும் ஆசீர்வதிப்பான்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

FACE BOOK- Dr. K. Vaheesar