களுத்துறை பிரதேசத்தில் பல இடங்களில் இரண்டு மன்னா கத்திகளை எடுத்துச் சென்று பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களை கைது செய்ய 5 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பாணந்துறை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் இந்த இரு கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் படுகாயமடைந்த இருவர் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் சிம் அட்டையை விற்பனை செய்யும் ஒருவரையே சந்தேகநபர்கள் இருவரும் முதலில் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது 39,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி அட்டைகளையும், 55,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பணத்தையும், 80,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் சந்தேகநபர்கள் விற்பனையாளரிடம் இருந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த சிம் அட்டை விற்பனை பிரதிநிதி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் பண்டாரகம நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் அங்கு பணத்தை வைப்பிலிடுவதற்காக காத்திருந்த நபர் ஒருவரையும் தாக்கியுள்ளனர்.அப்போது, துப்பாக்கி ஏந்திய வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென வங்கிக்குள் நுழைந்து கதவுகளை மூடினர்.மன்னா தாக்குதலில் படுகாயமடைந்து ATM இயந்திரத்திற்கு அருகில் விழுந்த நபரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க பண்டாரகம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பின்னர் பண்டாரகம நகரத்திற்கு வந்து, அவர்கள் வந்த முச்சக்கர வண்டியை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்த இளைஞனை கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ,இளைஞர், மர்மநபர்களை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.பண்டாரகமவில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற முச்சக்கரவண்டி கொட்டாவ பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது எனவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பண்டாரகம வல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் சந்தேகநபர்கள் களுத்துறை வீதியிலுள்ள கோனதுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற நிலையில் அங்கு கத்தியைக் கண்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.இதன்போது‘நாங்கள் உன்னை வெட்டவர வில்லை, இதை வீட்டுக்கு கொண்டு செல்கிறோம். பெட்ரோல் பெறவே வந்துள்ளோம்’ என கூறி தம்மிடமிருந்த கத்தியை வீசி விட்டு எாிபொருளை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தப்பியோடிய கொள்ளையர்களை கைது செய்வதற்காக பண்டாரகம பாணந்துறை அங்குருவத்தோட்ட பொலிஸாரின் மூன்று குழுக்களும், மேலதிகமாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு விசேட பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன