
மாவீரர் நாளை நினைவேந்த, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவினை மீள் பரிசீலிப்பதற்கான நகர்த்தல் பத்திரம் நேற்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை இன்று சுமார் 3 மணிநேரம் இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
வழங்கப்பட்ட கட்டளை சட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை தெரிவித்துள்ள நீதவான், அதை இரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டிய தேவை இருப்பதாக தான் கருதவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் மத அனுஸ்டானங்களை மக்கள் வணக்க ஸ்தலங்களில் மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்ற வகையிலான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் எதிர் தரப்பினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீக்காந்தா மற்றும் சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
