கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கார் சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) மீண்டும் அழைக்கப்பட்ட போது, சந்தேக நபர் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் கடுமையான பிணை நிபந்தனைகளிலும் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையான காலப்பகுதியிலி் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, வழக்கு முடியும் வரை வெளிநாட்டு பயணத்தடை விதிக்கவும், சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் மூன்று பிள்ளைகளுக்கும் தலா 05 இலட்சம் ரூபா கருணைக் கொடுப்பனவாக 15 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு கார் சாரதி நடவடிக்கை எடுத்துள்ளார்.