கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கோ அமோக்சிக்லாவ் எனும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற் பாகங்களை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 50 வயதுடைய ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பின்னர் தேசிய வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்ட கோ அமோக்ஸிக்லாவ் என்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் குறித்த தடுப்பூசி பாவனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயாளியின் மரணம் தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்துரைத்த சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ், குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் சுகாதார அமைச்சு உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசி நிறுவனத்தின் அறிக்கையின் படி, அவர்களுக்கே அந்த தடுப்பூசி தொடர்பான தெளிவில்லை எனவும் ரவி குமுதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.