‘ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறுவது உறுதி. அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை அறிவிப்பு செய்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் இருக்கப்போவதில்லை’ என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.‘அடுத்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டின் தற்போதைய நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனுபவம் திறமையுள்ள தலைவர் நாட்டுக்கு தேவை.அந்த தகுதிகள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றன. விழுந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்பி தனது இயலுமையை செயற்பாட்டில் காட்டி இருக்கிறார். அதனால் இன்று மக்கள் மனதில் இருக்கும் ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்து வருகிறார். அத்துடன் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்பார்கள். அத்துடன் கடந்த அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களால் நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தபோது, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு தனக்கு வரும் என்பதை ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்தே இருந்துள்ளார். இது தொடர்பாக நானும் பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு திருட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்கவுடன் கதைத்துவந்தேன்.அதன்போதேல்லாம், சற்று பொறுமையாக இருங்கள். இன்னும் சில மாதங்களில் இவர்கள் வீழ்ச்சியடைந்து அரசாங்கம் பரிபோகும் என அவர் எனக்கு தெரிவித்தார்.அவர் தெரிவித்த பிரகாரமே ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. மேலும் நாடு வங்குரோத்து அடைந்து, நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனி நபராக இருந்து வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்ப முன்வந்தார். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரியதொரு சக்தியை வழங்கவேண்டியது எமது பொறுப்பு. அதனால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி பாரிய சம்மேளனம் ஒன்றை நடத்த இருக்கிறது. அதில் அடுத்துவரும் 2048 வரை நாட்டை கட்டியெழுப்புவது ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமாகும் என்பதை உறுதியாக தெரிவிப்போம்’ என ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.