பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன், பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் அரசியல் சாசனத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பிற அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரியுள்ளார்.