மலேசியாவுக்கு இந்தியா வழியாக இலங்கை சிறுவர்களை கடத்தும் மனித கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்தது.
குறித்த மனித கடத்தலில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 5 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 28 சிறுவர்கள் இலங்கையிலிருந்து மலேசியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழந்தைகள் நாடு திரும்பவில்லை எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி சந்திம மனுஜ முனசிங்கவினால் குற்றப் புலனாய்வு மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
முறைப்பாட்டாளர் தமது திணைக்களத்திற்கு வந்து சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியதாகவும், இது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்தும் தங்களுக்கு மின்னஞ்சல் செய்தி வந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மின்னஞ்சல் செய்தியின் தரவுகளின்படி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட 28 சிறுவர்கள் தாய்மார்களுடன் அல்லது தனியாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றுள்ளனர், தாய்மார்கள் மட்டுமே நாடு திரும்பினர் என புகார்தாரர் கூறினார்.
இந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் குழந்தைகளை மலேசிய பெண் ஒருவர், அந்நாட்டு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குடிவரவு திணைக்களத்தினால் விமான நிலையத்தில் வைத்துள்ள படிவத்தை ஒருவர் வெளிநாட்டுக்கு அனுப்பிய போது பூர்த்தி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளதுடன், அந்த நபர் குறித்த தகவல்களை பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த குற்றம் குற்றவியல் சட்டத்தின் 360 மற்றும் 398 ஆகிய பிரிவுகளின் கீழ் வருவதால், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது