யாழ்ப்பாணம் மாதகலில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவிருந்த
காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பினால் இன்று கைவிடப்பட்டது.
ஜே.150 கிராம அலுவலர் பிரிவில் மூன்று பரப்புக் காணியை சுவீகரிக்க வந்த நில அளவை திணைக்களத்தினரை
தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணி சுவீகரிப்பைத் தடுக்கும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழரசுக் கட்;சியின் தலைவர் மாவை.சேனாதிராசா,
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் உட்பட பிரதேச மக்கள்,
அரசியல் கட்சிகளின்; பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை மாதகல் மேற்கு பகுதியிலும், கடற்படையினரின் தேவைக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கில்,
அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்த நிலையில், அங்கும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் ஒன்றுதிரண்டு
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டு, நில அளவைத் திணைக்கள
அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் இன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தனர்.
மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி அன்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த விடையம் தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்
காணி உரிமையாளர்களும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் யசோதா உதயகுமாரை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, தனக்கு மேல் இடத்தில் இருந்துவரும் உத்தரவுகளையே தான் நடைமுறை படுத்துவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.