நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மாலை மின்விநியோகம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று (22) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின் விநியோகத் தடை 30 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்த காரணத்தினால் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.