மின்சாரக் கட்டண உயர்வை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யாவிட்டால், அது பேக்கரித் தொழிலைப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் பேக்கரிப் பொருட்களில் விலையேற்றத்தை ஏற்படுத்தும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேக்கரி பொருட்களின் விலை அதிகரித்தால், மக்கள் வாங்க மாட்டார்கள், அது தொழில்துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.பேக்கரி உற்பத்திகளுக்கு 100 வீதம் மின்சாரம் தேவைப்படுவதால், நாட்டில் இயங்கும் பேக்கரிகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளால் தற்போதைய மின் கட்டண உயர்வை தாங்க முடியாது. மின்சாரம் பயன்படுத்தாமல் இயங்கும் பேக்கரியை கண்டுபிடிப்பது கடினம்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.“மின்சாரக் கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 36 சதவீத வருமான வரியும், 15 சதவீத வெட் வரியும் செலுத்த வேண்டும். இத்தனை அதிகரிப்பால் இந்தத் தொழிலை தொடர முடியாது,” என்றார்.“நாங்கள் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும், ஆனால் நாங்கள் இன்னும் அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம், இருப்பினும், நாங்கள் எங்களால் முடிந்தவரை தற்போதைய மட்டத்தில் விலைகளை பராமரிக்கிறோம்,”எனவே, தொழிற்சாலைகளுக்கும், பேக்கரி தொழிலுக்கும் மின் கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக வரியை மறுபரிசீலனை செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.