கடந்த 28 ஆம் திகதி வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய இந்த சந்தேகநபர் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த நபருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கொழும்பு 15 பகுதியில் வசித்து வந்தவர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர் போதைப்பொருள் வியாபாரி மற்றும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளி ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.
வௌிநாட்டில் உள்ளவரின் வழிகாட்டலில் இறந்தவருடன் சுற்றுலா செல்வதாக கூறி அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு உதவிய குற்றத்திற்காக சந்தேகநபருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு பணம் வழங்கிய சந்தேகநபர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 1,759,980 ரூபா மற்றும் 9 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் பணத்தை இலங்கை போதைப்பொருள் வலையமைப்பில் பயன்படுத்துவதாகவும், கொலையின் பின்னர் சந்தேகநபருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.