ஆலமர விழுது பிடித்து
அழகான ஊஞ்சல் கட்டி
ஆடி மகிழ ஆசை.
ஆற்றங்கரை மண்ணில்
ஆசையாய் வீடுகட்டி
விளையாட ஆசை.
கார்மேகம் திரண்டுவந்து
கவின்மாரி பொழியும் போது
காலார நடந்து வர ஆசை .
என்மேல் விழும் மழைத்துளியை
என் நாவால் எட்டிப்பிடித்து
சுவைத்துப் பார்க்க ஆசை.
தங்கை விரல் பிடித்து
தம்பி தொடர்ந்து வர
தனியே நடக்க ஆசை
வீட்டின் முற்றத்திலே
விழும் மழை நீரில்
காகிதகப்பல் விட ஆசை.
கதிரவனுக்கு போட்டியாய்
காலை முதல் மாலை வரை
களத்தில் விளையாட ஆசை.
எழில்கொஞ்சும் வயலில்
ஏர்பூட்டி நான் உழுதிட
என்னுள்ளே சிறு ஆசை.
பறித்த நாற்றெடுத்து
பக்குவமாய் வேர்பிடித்து
சேற்றில் புதைக்க ஆசை.
தோட்டத்து போட்டுவைத்த
வேர்க்கடலை தூர் புடுங்கி
சுட்டுத் தின்ன ஆசை.
உண்ட நுங்கெடுத்து
உருப்படியாய் வண்டிசெய்து
ஊர்நடுவே ஒட்ட ஆசை
ஒன்றாய் ஊர் கூடி
ஒருபானைப் பொங்கலிட
வாழையிலையில் தின்னஆசை
சிறிய வீட்டுக்குள்ளே
சிறகடிக்கும் சிட்டுக்குருவியை
சிமிட்டாமல் பார்க்க ஆசை.
கள்ளம் கபடமற்ற
வெள்ளந்தி மனிதருள்ளே
வாழ்ந்திட வெகு ஆசை
மனிதம் மறக்காத
மனிதன் வாழும் மண்மீது
மனிதனாய் வாழ ஆசை.