இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பம் வழங்குமாறு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் இது குறித்து எழுத்துமூல அறிவித்தலை வழங்கியுள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வாறான தெளிவுபடுத்தலுக்கான சந்தர்ப்பம் கிடைத்த பின்னர் உரிய நாடாளுமன்றக் குழுவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு மத்திய வங்கி தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே இந்த வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எனவே, மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய வேதனத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் நியாயம் குறித்து, பொருத்தமான நாடாளுமன்றக் குழுவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு வாய்ப்பை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கி தமது ஊழியர்களின் சம்பளத்தை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், இந்த நடவடிக்கை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளான இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை சந்தித்து அவர்கள் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, சமகால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய இந்தக் குழுவினர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும் விளக்கமளித்ததோடு. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பதிலளித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநருடன், மத்திய வங்கியின் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் உட்பட எட்டுப் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.