மாலியில் பேருந்தொன்று தீ வைத்து எரிக்கப்பட்டதில், 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதிகளால் குறித்த பேருந்துக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே 33 பேரும் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.
மாலியின் சாங்கோ ஹெரி என்ற பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது சென்றுகொண்டிருந்த பேருந்தை மறித்த பயங்கரவாதிகள் சிலர், பேருந்தின் சாரதியைக் கொலை செய்துவிட்டு, பேருந்தின் கதவுகளை மூடி அதற்குத் தீ வைத்துள்ளனர்.
இதன்போது தப்பியோட முயற்சித்தவர்கள், பேருந்தின் கதவுகளைப் பயங்கரவாதிகள் மூடியதால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்திருந்த நிலையில், 7 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தபொழுதிலும், அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.